Wednesday, April 22, 2009

நினைப்பதெல்லாம் நடந்துவிடும்.-ப்குதி.5. மனதோடு உரையாடலாம்




"ஏ..மனமே உன்னோடு ஹாயாக சில நிமடங்கள் தனிப்பட்ட முறையில் பேச வேண்டும்.."
"நான் ரொம்ப பிஸி. நிறைய வேலைகளிருக்கிறது. பரவாயில்லை..நாம் சிறிது நேரம் பேசுவோம் எனக்கும் போரடிக்கிறது.."
"என்னது மனதுக்கே போர் அடிக்கிறதா..?"
"இதென்ன அண்ணாமலைக்கே பாலா என்கிற மாதிரி..? மனதுக்குதான் போர் அடிக்கும்ம்.."
"போரடித்தால் என்ன செய்வாய்,,,?"
"உடலை திமர வைப்பேன். மனித முகங்கள் தாக்க வருகிற கரடியாகத் தோணும். சில உதடுகளில் நிக்கோடின் அரிப்பைத் தூண்டுவேன். சில நுரையீரல்களுக்கு 'டாஸ்மாக்' வாசனை தேவைப்படும்.சிலருக்கு புத்தகம். சிலருக்கு டி.வி., சிலருக்கு ஹிஹி..ஹி..,சிலருக்கு தூக்க மாத்திரை..இப்படி நிறைய இருக்கிறது.."
"மனமே நீ ஒரு மாபெரும் ஆற்றல். மனிதனுக்கு வாய்த்த ஆறாவது அறிவு. ஒவ்வொரு அறிவும் தாம் செயல்பட ஒரு ஊடகம் வைத்திருப்பது போல். சிந்திக்கும் பகுத்தறிவான நீ, வலது மூளையும் இடது மூளையும் கட்டப்பட்ட கபாலத்தேரின் உச்சியில் சாரதியாய் உட்கார்ந்திருக்கிறாய். எல்லாம் சரி..அங்கு உட்கார்ந்து என்ன செய்கிறாய்..?"
"வியாபாரம் செய்கிறேன்"
"என்ன வியாபாரம்"
"எண்ண..வியாபாரம். என் கடை எண்ணக்கடை. உடல் செயல்வடிவமானது.உயிர் ஒளிவடிவமானது. மனமாகிய நானோ எண்ண வடிவமானவன். என் பணி கண்டதையும் எண்ணிக்கிடப்பதே."
"உன் வாடிக்கையாளர்கள் யார்..?"
"உயிருள்ள உடல் என்னுடைய main dealer. புலன்கள் sub-dealer. செல்கள் என் நுகர்வோர்.."
"எண்ணங்களை வாங்கி அவர்கள் என்ன செய்கிறார்கள்..?"
"உணர்ந்து அனுபவிக்கிறார்கள்.செயலுக்குள் ஈடுபடுத்திப் பொருளாய் மாற்றுகிறார்கள். புதிய கொள்கையையோ
கருத்தையோ உருவாக்குகிறார்கள், மொழியாகப் பேசுகிறார்கள்.."
"இதில் உனக்கென்ன லாபம்..?"
"எனக்கு கிடைக்கும் திருப்திதான் லாபம். திருப்தி கிடைக்காவிட்டால் நஷ்டம்.."
"லாபம் வந்தால் என்ன செய்வாய்..? நஷ்டம் வந்தால் என்ன செய்வாய்..?"
"அதையும் எண்ணங்களாகவே மாற்றிவிடுவேன். லாபம் எனில் ஆணவச்சாயம் பூசி அகங்காரமாயும், நட்டம் எனில் சோகச்சாயம் பூசி விரக்தியான எண்ணங்களாக்கிவிடுவேன்.நான தூண்டில் போட்டு அதில் நானே சிக்கிக்கொள்கிறேன். இதுதான் என் இயல்பு,,"
"மாற்றிக்கொள்ள முடியாதா..?"
"அதைப்பற்றி கவலைப்பட வேண்டியது நீங்கள்தான். காரணம்..என்னை எதுவாக நினைக்கிறீர்களோ..நான் அதுவாகவே மாறிவிடுவேன். நினைத்தவர்களையும் மாற்றிவிடுவேன்."
"நல்லதே விளைய நாங்கள் என்ன செய்ய வேண்டும்,..?"
"நல்லதை நினை ம்னமே,."

"நல்லதை நினைப்பது உன் வேலை இல்லையா.."
""நல்லைவைகள் மிக மிக உயரத்தில் இருக்கின்றன. அவ்விடத்திற்கு சென்று நான் கொள்முதல் செய்துவரும் வரை புலன்கள் பொறுப்பது இல்லை. அதனால்தான் தாழ்வான நிலையில் உள்ள தரமற்ற எண்ணக்களைத் தருகிறேன்."
"தரமற்ற எண்ணங்கள் என்றால்..?"
"உயரத்தில் உள்ளவை உன்னதங்கள்.என் கைக்கெட்டும் தூரத்தில் இருப்பவையோ..கோபம்,எரிச்சல்,சலிப்பு,சோம்பல், விரக்தி, தற்கொலை.."
"அய்யோ.."
"என்ன அய்யோ? தலைவர்களூக்காக தீ குளித்தவர்கள்,நாக்கை வெட்டி உண்டியலில் போட்டவர்கள், தீர்க்க முடியாத கடனை தண்டவாளத்தில் அடைத்தவர்கள், நினைத்த காதல் நிறைவேறாமல் மலையிலிருந்து குதித்தவர்கள்,இப்படி..இப்படி..என்னை உயரத்துக்கு எடுத்து செல்லாதவர்கள் ஏராளம்.."
"உன்னால் இதை எல்லாம் தடுக்க முடியாதா..?"
""முடியும். தவமிருந்தால்தானே வரம் கிடைக்கும்..இல்லையெனில் சாபம்தான். இயல்பாகவே நான் ஒரு குப்பைத் தொட்டி.முயற்சி செய்யாமலே என்னிடம் குப்பைகள் குவியும். முயற்சியின்றி சேர்ந்தால்தான் குப்பை. முயற்சி செய்தால் மட்டுமே தூய்மை.அம்முயற்சிக்கு எனக்கு தூண்டுதல் வேண்டும்.."
"எதை வைத்துத் தூண்ட..?"
"விழிப்புணர்வை வைத்து.."
"இதென்ன புது உணர்வு.."
"உம் போன்ற ஆட்களுக்கு இது புதிதாகத்தான் இருக்கும். சரி எனக்கு நேரமாகிறது நான் வருகிறேன்.."
"மனமே எங்கே போகிறாய்..?"
"ஊர் சுற்றத்தான்..தெரியாமல் விழிப்புணர்வு இல்லாத ஒருவனிடம் சிக்கிக்கொண்டேன். கண்டதையும் நினைக்க வேண்டும்..நான்..வருகிறேன்..பை.."

"எண்ணாத எண்ணமெல்லாம்
எண்ணி எண்ணி ஏழை நெஞ்சம்
புண்ணாக செய்தது இனிப்
போதும் பராபரமே.."
என்று விழிப்புணர்வை வேண்டினார் தாயுமானவர்.

"ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைஸ் சுட்டறுத்து
தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்..?"
விழிப்பின் உச்சியில் கிட்டும் சுகத்திற்காக இப்படி ஏங்கினார் பத்திரகிரியார்.

விழிப்புணர்வு கூடக்கூட யாருடைய மனது படிபடிபயாக திருந்தி அமைகிறதோ , அம்மனிதனே மெய்வாழ்வு பெறுகிறான். மனோலயப்பட்டால் மனிதன். மனோ நாசம் உற்றால் ஞானி. மானுடப்பிறவி எடுத்ததன் நோக்கமே ஒருவன் தன்னை குணசீலனாக்கிக்கொள்ளவே.நல்லெண்ணமும் , நற்செயலும், நன்மொழியும் மனிதனை குணவானாக்கும்.
"நானேதும் அறியாமே என்னுள் வந்து
நல்லனவும் தீயனவும் காட்ட நின்றாய்.." என்று நெகிழ்ந்தார் அப்பர் பெருமான்.

சாதாரணமாக வாழும் வாழ்கை என்பது, உணர்தல், பார்த்தல், சுவைத்தல், மூச்சுவிடுதல், கேட்டல் எனலாம்.
விழித்துணர்ந்து வாழ்தல் என்பது..
உடலும் மனமும் ஒன்றி உற்றறிதல்,நாவும் மனமும் பின்னி உணவை சுவைத்தல்,நாசியின் காற்றோடே மனமும் ஏறி இறங்குதல்,கண்களோடு மனம் கலந்து காணல்,செவிகளில் ம்னம் இணையக் கேட்டல்,மனம் மனமாயிருந்து சிந்தித்தல்.

விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார்.நாமும் பிழைத்துக்கொள்வோம். விழிப்பே உயர்வு. விழிப்புடன் மனதை சிக்கெனப் பிடித்துக்கொண்டால் மட்டுமே உயர்வு.

விழிப்புணர்வு என்றால் என்ன....?

4 comments:

  1. rembap pidiththathunga:)

    payanullathu!!

    ReplyDelete
  2. உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கேன்.
    நேரம் கிடைக்கும் போது பார்க்கவும்.

    http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_2346.html

    ReplyDelete
  3. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : முனைவர். இரா. குணசீலன் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : வேர்களைத்தேடி........

    வலைச்சர தள இணைப்பு : உன்னையறிந்தால்...

    ReplyDelete