Sunday, April 12, 2009

நினப்பதெல்லாம் நடந்துவிடும் - பகுதி.1. உயர்வின் ரகசியம்


ஒவ்வொரு மனிதனும் தன்னை உயர்த்திக்கொள்ள வேண்டும் அப்படி உயர்த்திக்கொள்ளத் தவறிவிட்டால் நாம் அடுத்தவர்களை உய்ர்த்தும் தகுதி அற்றவர்களாகிவிடுவோம்.

எதற்காக நம்மை உயர்த்திக்கொள்ள வேண்டும்..?உயர்த்திக்கொள்ளுதல் அவசியமெனில் நாம் கீழான தாழ்வு நிலையில் இருக்கிறோமா..?அடுத்தவர் உயர்வுக்கு நாம் எவ்விதத்தில் பொறுப்பு..? உயர்வு நிகழவில்லை எனில் குடியா முழுகிவிடும்..?

ஒரு கருத்தை வைத்ததுமே ஆயுதம் ஏந்திய போர் வீரர்களாய் உள்ளத்தில் கேள்விகள் அணிவகுப்பது இயல்பே.

கிணற்று நீர் அதன் இயல்பில் மண்ணுக்கு கீழான சமநிலையில் இருக்கிறது. எந்த பயன்பாட்டிற்காக தண்ணீர் உருவானதோ அதை நிறைவேற்ற  மேலே வந்துதான் ஆகவேண்டும். அப்போதுதான் வறண்ட நாக்குகள் நனையும். மனிதனும் அப்படியே.

தண்ணீரே நினைத்தாலும் தானாக உயர முடியுமா..?ராட்டினம், கயிறு, வாளி, இவை எல்லாம் இருந்துவிட்டால் தண்ணீரை இறைத்துவிடலாம். கீழே இருக்கும் மனிதன் எப்படி உயர்வது..? யோக நூல்க்ளின் வழியே ஞானிகள் கூறினார்கள், "தலை மையத்தில் ஒரு ராட்டினத்தைத் தொங்கவிட்டு, தண்டுவடம் என்கிற கயிற்றில் கட்டி, உணர்வோடு இறக்கினால் அது கீழே இருக்கும் குண்டலினி ஊற்றைக் கிளப்பி உச்சிக்கு ஏறி ஞானத்தை முகர்ந்து வரும். மனிதன் உயர்வான்."

"அய்யய்யோ ஆளை விடுப்பா..குண்டலினியா.."என்று நாம் அலறுகிறோம். ஞானம் என்றாலே நமக்கு அச்சம். ஞானத்தை மதங்களோடு சேர்த்து பார்ப்பதே காரணம். மனிதர்கள் அவரவர் மத சிறைக்குள் இருந்துகொண்டு பூட்டைத் திறக்கும் சாவியை கொடுத்தாலும் வாங்க மறுக்கிறார்கள். சிறைக்குள்ளேயே சுதந்திரமாய் இருப்பதாய் பாவித்துக்கொண்டு உயர்வெய்தாமல் வாழுகிறார்கள்.அவர்களுக்கு எதையுமே அறிவியல்பூர்வமாகத்தான் சொல்லவேண்டும்.

என்ன செய்வது..? உலகமே திரும்பி பார்த்து ஏங்கும் இந்த ஞான பூமியில்தான் வறுமை, பிணி,பஞ்சம்,பட்டினி, விலைபொருளாய் கல்வி, பாலைவன ஊற்றாய் வேலை வாய்ப்பு,போட்டி, பொறாமை, எய்ட்ஸ்,எல்லாமே தலை விரித்தாடுகிறது.நாம் சாவிகளை தூக்கிப்போட்டு விட்டோம் அதனால்தான் தாழ்வு.சாவியை தேடி எடுத்துவிட்டால் உயர்வுதான். எடுப்பதற்கு தேவை கொஞ்சம் அறிவு, கொஞ்சம் பொறுமை, கொஞ்சம் உணர்வு.

இந்த பூமி உருண்டையும் அதன் மீதான உயிர் தொகுதிகளின் வாழ்வும் மிக உயர்வான இடத்திலிருந்து இறங்கி வந்தது என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.எங்கிருந்து நாம் எதுவாக புறப்பட்டோமோ..அவ்விடத்திற்கு மீண்டும் திரும்புவதே உயர்வு. வரும்போது இறங்கி இறங்கி வந்திருக்கிறோம். திரும்புகையில் ஏறி ஏறி உயர வேண்டியிருக்கிறது. அதனால்தான் இவ்வுலகின் ஞானத்தகப்பன் "வானின்று உலகம் வழங்கி வருதலால் " என்றான்.வாழ்வு துவங்கிய இடம் வானம். வானமே நம் எல்லை."மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்"என்பார்கள். வானம்தான் மரத்தை வைத்தது, வானமே தண்ணீரை ஊற்றுகிறது.
"மண்ணோடு விண் காட்டி மரைந்து மறையா அருளைக்
கண்ணோடு கண்ணாக என்று காண்பேன் பராபரமே"- என்று ஏங்குவார் தாயுமானவர்.

நாமெல்லாம் விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்தவர்கள்தான்.மண் சூடே சுகம் என்று மண்ணீலேயே தங்கி விட்டதால் விண்ணின் முகவரி மறந்து போயிற்று.இல்லையெனில் நாமும் "மண்ணோடு விண்காட்டி" என ஏங்கத்துவங்கியிருப்போம். மறந்ததை நினைவுபடுத்தவே ஆலயங்களில் ஏற்றப்படும் கற்பூரக்கட்டிகள் சோதியாய் உயர்த்தும் தம் ஒற்றை சுட்டு விரலால் "என்னை உருக்கி நான் உயரும் திசை கண்டு தெளிந்து உன்னையும் உயர்த்திக்கொள் "- என்கிறதோ தெரியவில்லை.

நம் மக்களுக்கு செத்தால்தான் பரலோகம். கண்போன பின்னால்தான் சூரிய நமஸ்காரம், விழிகளை விற்றுத்தான் சித்திரம் வாங்குவார்கள். வானத்தோடான உறவு என்றாலே மரணத்துக்கு பிறகுதான் எனும் தப்பெண்ணமும் இருக்கிறது.ஆகாயத்தில்தான் நம் ஆதி தாய் இருக்கிறாள். வாழும்போதே நாம் பரலோகத்தை பார்த்துவிட வேண்டும்.

அதுவே உயர்வு. அதுவே ஆனந்தம்.

"நிலமைந்து நீர் நான்கு நீடங்கி மூன்றே 
உலவை இரண்டு ஒன்று விண்"

இது பார்ப்பதற்கு திருக்குறள் போலவே தெரியும். ஔவையின் குறள்."பிறப்பின் நிலைமை" எனும் அதிகாரத்தின் ஐந்தாம் குறள். இக்குறளில் அப்படியென்ன இருக்கிறது..?பஞ்ச பூதங்களின் வரிசைதானே சொல்லப்பட்டிருக்கிறது. ஆம்.. எப்படி சொல்லப்பட்டிருக்கிறது..?

ஆகாயம்   -முதல் பூதம்.
காற்று  - இரண்டாம் பூதம் 
நெருப்பு  - மூன்றாம் பூதம் 
நெர்  - நான்காம் பூதம் 
நிலம்  - ஐந்தாம் பூதம்.

இக்குறளில் வேறேதேனும் நுட்பங்கள் உள்ளதாவெனில் உள்ளது. உலகம் தோன்றிய பரிணாம வரிசை இதுதான். ஆனால் நாம் இதற்கு ஏற்கனவ ஒரு வரிசையை தந்திருக்கிறோம்.

நிலம் -நீர்-காற்று - நெருப்பு - ஆகாயம் என்று.
இதை உணர்ந்து சொன்னவர்களும் ஞானிகள்தான். இரண்டில் எது சரி..? எது தவறு..?

இரண்டுமே சரி.

கோடி கணக்கான ஆண்டுகள், யுகங்கள் என காலத்தையும், வாழ்கைக்கான விதை புள்ளியையும் தன்னுள் ஒடுக்கி தன்மயமாய் இருந்த சுத்தவெளியில் 
ஆகாயத்தின் தன்னறிவு காற்றறிவாய் இறங்கி , பின் தீ அறிவுக்கு இறங்கி ,ஆதன்பின் நீர் அறிவுக்கு இறங்கி இறுதியாய் நில அறிவாய் நிலைத்தன் விளைவுதான் இந்த உயிர்கோளம் உருவாக் காரணம்.எரிந்து சுழன்று குளிர்ந்து அணைவை நோக்கிப்போகும் நெபுலாவின் சின்ன சின்ன பிரதிகள்தான் நாமெல்லாம்.

விண்ணில் துவங்கிய அதிர்வு மண்ணீல் உயிராய் மலர்ந்தது. உயிரின் அறிவு நாட்டம் மனிதனை கொண்டு வந்தது. மனிதன் தான் எங்கிருந்து வந்தோம் என ஆராயத் துவங்கினான்.

நிலத்திலிருந்து உயர்ந்து  நீருக்கும்.
அதிலிருந்து உயர்ந்து நெருப்புக்கும்..
நெருப்பிலிருந்து உயர்ந்து காற்றுக்கும்..
காற்றிலிருந்து உயர்ந்து ஆகாயத்துக்கும் என்றொரு வரிசையக் கண்டுகொண்டான்.

ஆகாயம் என்பது அருள்வெளி - பூமி என்பது பொருள்வெளி.
முதல் வரிசை வந்த வழி. இரண்டாம் வரிசை செல்லும் வழி.

ஒடுங்கியது வெடித்தால் உலகம். வெடித்தது ஒடுங்கினால் ஞானம்.

அருளிலிருந்து பொருளுக்கு இறங்கி வந்தோம். 
பொருளிலிருந்து அருளுக்கு ஏறி உயர்வோம்.

"அருளில்லார்க்கு அவ்வுலகமில்லை 
பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை.."

இதை உணராமல் தடுமாறினால் முழுமையான உயர்வடையாமல் நடுவழியில் தத்தளிக்கத்தான் வேண்டும்.

"தாளுண்ட நீரை தலையாலே தான் தருதலால்.."- என பாடுவாள் ஔவை.
எத்தன்மைத்தான நீராய் இருந்தாலும் அதை உறிஞ்சி வடிகட்டி உயர்த்தி தன் உச்சியில் இனிக்கும் நீராய், ஞான ரசமாய் வழங்கும் ஓரறிவு உயிரான தென்னைக்கே சாத்தியம் என்றால் ஆறறிவு மனிதனின் உயர்வில் என்னவெல்லாம் நிகழும்..?

"நினைப்பதெல்லாம் நடக்கும்"

உயர்வோடு உள்ளத்தில் உருவான எண்ணங்கள் எல்லாம் மெய்யாகும். அம்பலத்தில் அரங்கேறும். கனவுகள் மெய்ப்படும். தோல்விகள் அழிந்து வெற்றிகள் பெருகும்.ஆனந்தம் ஊற்றெடுக்கும்.

வாருங்கள் உயர்வின் திசையில் பயணிப்போம்....

3 comments:

  1. உலகமே திரும்பி பார்த்து ஏங்கும் இந்த ஞான பூமியின் உரவு பற்றி சிறப்பான ஆக்கம். பாராட்டுக்க்ள்..

    வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..
    http://blogintamil.blogspot.in/2014/09/blog-post_13.html

    ReplyDelete
  2. வலைச்சர அறிமுகத்திற்கு நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete

  3. இன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete